search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை நீடிப்பு"

    தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #IMD #TNRains
    சென்னை:

    தென் கிழக்கு வங்க கடலில் கடந்த வாரம் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வடகடலோர மாவட்டங்கள் வழியாக தரைப்பகுதியை கடந்து கேரளா சென்று விட்டது.

    இதனால் சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.

    மேலும் 9-ந்தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.


    இதற்கிடையே குமரிக் கடல் மற்றும் தென் கிழக்கு அரபிக் கடலில் மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

    இதன் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரி கடல் பகுதிக்கும் தென் கிழக்கு வங்க கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. #IMD #TNRains
    தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், சென்னையில் ஒரு சில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #LowPressure #HeavyRain #ChennaiRain
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலோர மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கஜா புயலைத் தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் தமிழக கடலோர பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.



    இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும். சென்னையில் மிதமான மழை இருந்தாலும் ஒருசில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    பலத்த காற்று வீசுவதாலும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதாலும் மீனவர்கள் தெற்கு ஆந்திரா, தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தெற்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புயலாக மாற வாய்ப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்கால், தரங்கம்பாடி பகுதிகளில் தலா 7 செமீ மழை பெய்துள்ளது. வேதாரண்யம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, வலங்கைமான், கும்பகோணம், சென்னை விமான நிலையம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 5 செமீ மழை பதிவாகி உள்ளது.   #LowPressure #HeavyRain #ChennaiRain
    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை நீடித்து வருவதால் அணைகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #Rain
    தூத்துக்குடி:

    தமிழகம் அருகே மன்னார்வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக கன மழை பெய்தது. நேற்று காலை வரை விடிய விடிய மழை கொட்டியது.

    குறிப்பாக திருச்செந்தூர், காயல்பட்டினம் பகுதியில் பலத்த மழை பெய்தது. திருச்செந்தூரில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழை பதிவானது. திருச்செந்தூர் சபாபதிபுரம் தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்த தென்னை மரம் இடி தாக்கியதில் தீப்பற்றி எரிந்தது. ஆத்தூர் போலீஸ் நிலையம் அருகில் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்ததால் அங்கு மின்தடை ஏற்பட்டது. ஆறுமுகனேரியிலும் சிவன் கோயில் அருகிலும், பிரதான சாலை அருகிலும் மின்வயர் அறுந்து விழுந்தது. தகவலறிந்து மின் ஊழியர்கள் விரைந்து வந்து சரி செய்தனர்.

    தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் தண்டவாளப் பகுதியில் மழைநீர் அதிகளவு தேங்கியதால் ரயில்கள் புறப்படுவதில் தாமதம் நிலவியது. இரவு 7.50 மணிக்கு புறப்பட வேண்டிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 9 மணியளவில் புறப்பட்டுச் சென்றது.

    தூத்துக்குடியில் பிரதான பகுதிகளான குரூஸ் பர்னாந்து சிலை, பழைய மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியதால் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக கழிவுநீர் லாரிகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மாலை மழை குறைந்தது. எனினும் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்தது. உடன்குடி, குலசேகரன்பட்டினம், தண்டுப்பத்து, பரமன்குறிச்சி பகுதியில் நேற்று இரவு மழை பெய்தது. இன்று காலையும் மழை தூறிக்கொண்டிருந்தது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர், அலுவலக பணிகளுக்கு செல்வோர் குடைபிடித்த படி சென்றனர். தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. அப்பகுதி முழுவதுமே குளிர்ந்த காலநிலை நிலவியது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்(மில்லிமீட்டரில்) வருமாறு:-

    திருச்செந்தூர்-30, குலசேகரன்பட்டினம்-30, காடல்குடி-23, தூத்துக்குடி-8.1, ஸ்ரீவைகுண்டம்-4, விளாத்திகுளம்-2, சாத்தான்குளம்-1.2.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று ஓரிரு இடங்களில் மட்டுமே மழை பெய்தது. நாங்குநேரி, நெல்லை ஆகிய இடங்களில் லேசான மழையும், நம்பியாறு அணைப்பகுதியில் கன மழையும் பெய்தது. ஏற்கனவே பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு ஆகிய 3 அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

    பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று காலை 99.45 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 496.76 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 112.27 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85.65 அடியாகவும் உள்ளன. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 362 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதேபோல் கடனா அணை நீர்மட்டம் 65.40 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 61.75 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 20.50 அடியாகவும், கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 30 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 109 அடியாகவும் உள்ளன. குற்றாலம் மலைப் பகுதியில் பெய்துவரும் மழையினால் அருவிகளில் மிதமான அளவு தண்ணீர் விழுகிறது.

    மெயினருவி, ஐந்தருவியில் விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். எனினும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஏற்கெனவே தென்மேற்கு பருவ மழை காரணமாக சில பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பின. பெரும்பாலான குளங்களில் அதிகளவு தண்ணீர் நிரம்பியது.

    சமீபத்தில் பெய்த மழையினால் மாவட்டத்தில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கால்வரத்து குளங்களுக்கும், 50 க்கும் மேற்பட்ட மானாவாரி குளங்களுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளன. குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அதே வேளையில் சில பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் மழையால் சேதமானது விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. சுரண்டை பகுதியில் பெய்த மழையினால் அங்குள்ள இரட்டை குளம் 2-வது முறையாக நிரம்பி மறுகால் பாய்ந்து செண்பகம் கால்வாயில் தண்ணீர் செல்கிறது.

    இத்தண்ணீர் இலந்தை குளம் செல்லுவதால் இலந்தை குளத்தில் இருந்து மீன்கள் செண்பகம் கால்வாயில் ஏறிவருகின்றன. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சிலர் வலைகளை கொண்டு வந்து மீன்களை பிடித்து திருவிழாவை போல கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் விரால், கெண்டை, கெளுறு உள்ளிட்ட பல வகை மீன்கள் சிக்கின தண்ணீர் வருவதையும் மீன் பிடிப்பதையும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர். #Rain

    தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #TNRain #WeatherCentre
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    மத்திய வங்க கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலைக்கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இதற்கிடையே மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

    இவற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும். தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.


    சென்னையில் இடைவெளி விட்டு மிதமான மழை பெய்யும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

    மீனவர்களுக்கு 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 17, 18, 19 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மத்திய வங்க கடல் பகுதிக்கும் ஆந்திர கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    கடந்த 12 மணி நேரத்தில் தஞ்சையில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி முதல் பெய்த மழை அளவை கணக்கிட்டால் குறைவான மழையே பெய்துள்ளது.

    வழக்கமாக இந்த சீசனில் 262 மி.மீ. மழை பெய்யும். ஆனால் 229 மி.மீ. மழை தான் பெய்துள்ளது. 13 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #TNRain #WeatherCentre
    கேரளாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து பேரழிவை ஏற்படுத்தி உள்ள நிலையில், மேலும் இரண்டு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #KeralaFloods #KeralaRain
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருங்கியதால் ஒரே நேரத்தில் 22 அணைகள் திறந்து விடப்பட்டன. இதனால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மீட்புப் பணியில் ராணுவம், கடற்படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்திய வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் மேலும் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. கர்நாடகத்தின் தெற்கு உள்மாவட்டங்களிலும் தெலுங்கானா கடலோர மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


    மழை, வெள்ளம், நிலச்சரிவால் ரூ.8,316 கோடி அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில்  பார்வையிட்டார். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய ராஜ்நாத் சிங், கேரளாவுக்கு உடனடி வெள்ள நிவாரண நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இதேபோல் பல்வேறு மாநில அரசுகள், அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. #KeralaFloods #KeralaRain
    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணை நிரம்பி வருவதையடுத்து உதவி பொறியாளர் தலைமையில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது.

    மார்த்தாண்டம் பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    நாகர்கோவிலில் கொட்டித்தீர்த்த மழையினால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார் சாலை, செம்மாங்குடி ரோடு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.

    களியல், பேச்சிப்பாறை, குலசேகரம், பெருஞ்சாணி, குழித்துறை, தக்கலை, களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மயிலாடி, ஆரல்வாய்மொழி, கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் விட்டு, விட்டு மழை பெய்தது.

    திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரின் காரணமாகவும் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது.

    ஆனால் பேச்சிப்பாறை அணையில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் அதிக தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியதை அடுத்து அணையில் இருந்து பரளியாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். வலியாற்று முகம், அருவிக்கரை, திருவட்டார், மூவாற்றுமுகம், குழித்துறை, தேங்காய்பட்டணம் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணைக்கு 774 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பி வருவதையடுத்து உதவி பொறியாளர் தலைமையில் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் விடப்பட்டு உள்ளது. சானல்களிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் 39 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 291 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    1115 குளங்கள் 75 சதவீதமும், 422 குளங்கள் 50 சதவீதமும், 123 குளங்கள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளது. பாசன குளங்கள் நிரம்பி வருவதை அடுத்து கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி உள்ளனர்.

    வழக்கமாக 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு இதுவரை 1000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகள் நாற்று நடவும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.




    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது.

    நேற்றும் மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் அதிகபட்சமாக 23.4 மி.மீ. மழை பதிவானது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. திடீரென பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கன்னியாகுமரி, சாமித்தோப்பு, கொட்டாரம், பொற்றையடி பகுதிகளில் சுமார் 1 மணி நேரமாக இடைவிடாது கனமழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக இதமான குளிர்க்காற்றும் வீசி வருகிறது. பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

    கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு சாரல் மழையும் பெய்து வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.

    பரளியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மாத்தூர் தொட்டில் பாலத்துக்கு கீழ் செல்லும் சப்பாத்து பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தது.

    தொடர் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    குலசேகரம், கீரிப்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் சுமார் 200 டன் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 6.70 அடியாக இருந்தது. அணைக்கு 477 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 398 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.15 அடியாக உள்ளது. அணைக்கு 350 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 52 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு 53.81 அடியாக உள்ளது. அணை இன்னும் ஓரிரு நாட்களில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-14, பெருஞ்சாணி-10.2, சிற்றாறு-1-20.2, சிற்றாறு-2-3, புத்தன் அணை-12.8, முள்ளங்கினா விளை-11, கோழிப்போர் விளை-4, திற்பரப்பு-14.2, குருந்தன்கோடு-2.8, ஆணைக்கிடங்கு-5, நாகர் கோவில்-3.4, பூதப் பாண்டி-3.6, கன்னிமார்-21.4, சுருளோடு-11.4, பால மோர்-23.4, மயிலாடி-4.8, கொட்டாரம்-10.4.
    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் 750 பாசன குளங்கள் நிரம்பி விட்டன.
    நாகர்கோவில்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

    திற்பரப்பு, அடையாமடை, பூதப்பாண்டி, நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, குளச்சல், குருந்தன்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    ஆனால் பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்குகேற்ப தண்ணீரை திறந்து விடவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடுவதால் சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    புத்தேரி, பொற்றையடி, பூதப்பாண்டி பகுதிகளில் உள்ள பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட் டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் 750 குளங்கள் நிரம்பி விட்டன. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இறச்சகுளம் பகுதியில் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

    பாசன குளங்களில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். வழக்கமாக மாவட்டம் முழுவதும் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டும் அதே அளவு பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 6.10 அடியாக உள்ளது. அணைக்கு 1,018 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 654 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 61.60 அடியாக உள்ளது. அணைக்கு 351 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 12.25 அடியாக உள்ளது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 53.25 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6.90 அடியாக உள்ளது.
    குமரி மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் புயல் உருவாகி உள்ளது. இதனால் தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் கனமழை கொட்டி தீர்த்தது. நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் அடித்தது. நேற்றிரவு இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

    குளச்சல் பகுதியில் நள்ளிரவு 1 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளச்சலில் அதிகபட்சமாக7 செ.மீ. மழை பதிவானது.

    கொட்டாரம், குருந்தன் கோடு, கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை, புத்தன்அணை, பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்றிரவு இடி-மின்னலுடன் மழை பெய்தது. கொட்டாரம் அருகே மந்தாரம்புதூர் பகுதியில் மின்கம்பம் ஒன்று சரிந்தது.

    இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. சாமித்தோப்பு, கொட்டாரம், அகஸ்தீஸ்வரம், சுசீந்திரம் உள்பட கிராமங்களில் பகுதியிலும் நேற்றிரவு மின்சாரம் தடைபட்டிருந்தது.

    திற்பரப்பு அருவி பகுதியிலும் மிதமான சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள்.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. கோதையாறு, வள்ளியாறு, பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. சானல்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் பாசன குளங்கள் நிரம்ப தொடங்கி உள்ளன.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கன்னிப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 4.90 அடியாக இருந்தது. அணைக்கு 550 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 474 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 59.25 அடியாக உள்ளது. அணைக்கு 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-16, பெருஞ்சாணி-9, சிற்றாறு-1-28, சிற்றாறு-2-12, இரணியல்- 14.6, குளச்சல்-70, குருந்தன் கோடு-14.6, கோழிப்போர் விளை-10, முள்ளாங்கினாவிளை-12, புத்தன் அணை- 14.8, நாகர்கோவில்- 3.8, பூதப்பாண்டி-1.2, கொட்டாரம்-52.4.



    ×